'விஷ்' பண்றேன்னு... பொண்ணுங்க கிட்ட 'கலாட்டா' பண்ணிறாதீங்க... ஸ்கெட்ச் போட்டு 'காத்திருக்கும்' போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 27, 2019 09:28 PM
இன்னும் 4 நாட்களில் வரப்போகும் புத்தாண்டினை வரவேற்க, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டன.
நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், கடற்கரைகள் என சென்னை முழுவதுமே அன்று படு உற்சாகத்துடன் காணப்படும். அதேபோல பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு வாழ்த்து சொல்கிறேன் என்று கலாட்டா செய்யும் நபர்களை பிடிக்க, பெண் போலீசார் மாறுவேடத்தில் வலம்வர உள்ளனர்.
அதேபோல புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் அத்துமீறுபவர்கள், சில்மிஷம் செய்பவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். புத்தாண்டு இரவில் சென்னை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை நகர் முழுவதும் 35 போலீஸ் வாகனங்கள் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளன. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் மொத்தம் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினம் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், சென்னை நகர மக்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை போலீசார் தயாரித்துள்ளனர். இதுபற்றிய போலீசாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியாகிறது.