'ருசியான மலைப்பாம்பு கறி'... 'இளைஞரின் மொபைலை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்'... நாகர்கோவிலில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழி அருகே வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளதால், அங்கு வனப் பகுதி அதிகம். இந்தநிலையில் பூதப்பாண்டி, சுசீந்திரம், தேரூர், மணக்குடி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாகவும், அச்சங்குளத்தில் சிலர் வலைவிரித்து மீன்பிடிப்பதாகவும் வனத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது அச்சங்குளத்தில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சிவகுமார், மாணிக்கராஜ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் சிவகுமாரின் செல்போனை வாங்கி வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.
ஆமை, மலைப்பாம்பு, உடும்பு உள்ளிட்டவற்றைச் சமைத்து அவற்றை ருசித்துச் சாப்பிடும் வீடியோகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனால் மேலும் பரபரப்படைந்த அதிகாரிகள், சிவகுமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை சிவகுமார் வெளியிட்டார். அதில், ''பொற்றையடி மருந்துவாழ்மலையில் தன்னுடைய நண்பர் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் வேட்டையாடிய விலங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டதோடு, அவற்றை வீடியோவாகவும் எடுத்து தனது செல்போனில் வைத்துள்ளதாக'' அவர் கூறியுள்ளார். இதையடுத்து தினேசை கைது செய்த போலீசார், வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டதாக சிவகுமார், தினேஷ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்த மாணிக்கராஜை எச்சரித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.