'டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரல'... 'கொரோனா வார்டில் இருந்தவருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 28, 2020 10:34 AM

பரிசோதனை அறிக்கை வராத நிலையில், கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 years old man with Coronavirus symptoms, dies in Kanyakumari

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38  பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவதாக ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 66 வயது முதியவரான இவர், ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் மீன் பிடி தொழில் செய்துவரும் இவர், அங்கிருந்து வந்ததிலிருந்து காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு இன்னும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பு தான் முதியவரின் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.

Tags : #CORONA #CORONAVIRUS #NAGERCOIL #CORONAVIRUS SYMPTOMS #KANYAKUMARI