'அப்பாடா வெயில்ல இருந்து தப்பிச்சோம்'... 'திடீரென புரட்டி எடுத்த மழை'... உற்சாகத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 05, 2020 12:14 PM

சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் நாகர்கோவில் நகரமே குளிர்ந்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Heavy Rain to Pound Parts of Nagercoil

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெயில் போட்டு தாக்குகிறது. இதனால் ஏப்ரல், மே மாதம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தற்போது எழ தொடங்கியுள்ளது. இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கடுமையான வெயில் மக்களை வாட்டி, வதைத்து வருகிறது.கோடைகால வெயில் முன்கூட்டியே தொடங்கி விட்டதோ? என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நாகர்கோவில் நகரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மழை பெய்யாமல் இருந்தது. நேற்று முன்தினம் மலையோரப்பகுதிகளில் மழை பெய்தது. நேற்று நாகர்கோவில் நகரம், கன்னியாகுமரி, கொட்டாரம், பூதப்பாண்டி, மார்த்தாண்டம், சுருளோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மதியம் 2.30 மணி அளவில் தொடங்கிய மழை 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.

இதனால் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஓடிய தண்ணீரில் தத்தளித்தபடி சென்றது. தாழ்வான குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்தது. இந்த திடீர் மழையால் நகர்ப்பகுதியில் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : #RAIN #NAGERCOIL #HEAVY RAIN