'சென்னை மக்களே கொஞ்சம் ரிவைண்ட் பண்ணுங்க'... 'இந்த பூனைய ஞாபகம் இருக்கா?... 'சீனா TO சென்னை'... காப்பகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவிலிருந்து கப்பலில் சென்னை வந்த பூனை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விரும்புபவர்கள் தத்தெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த பூனை சென்னை வந்ததன் பின்னணி குறித்து சற்று திரும்பிப் பார்க்கலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்குக் கப்பல் ஒன்று வந்தது. அதில் விளையாட்டு பொம்மைகள் கொண்டு வரப்பட்ட கண்டெய்னரில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்தது. இதைப்பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளும், துறைமுக அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவர்கள் அதிர்ச்சி அடையக் காரணம், பிப்ரவரி மாதம் சீனாவில் கொரோனா வேகமாகப் பரவி வந்தது. ஆனால் அப்போது இந்தியாவில் கொரோனா பரவல் இல்லாமல் இருந்தது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பூனையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அந்த பூனை வண்டலூர் பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. கடந்த 3 மாதங்களாகச் சீன பூனையைக் கூண்டிலேயே அடைத்து வைத்துப் பராமரித்து வந்தனர். சீனாவிலிருந்து வந்த பூனை என்பதால் அதற்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வந்தன.
இந்த சூழ்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் உள்ள டிரஸ்ட் ஒன்றின் காப்பகத்தில் அந்த பூனை ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டிலிருந்து பூனைகளைப் பராமரித்து வரும் இந்த அமைப்பு தற்போது சீன பூனையையும் பராமரித்து வருகிறது. இந்நிலையில் பூனையை விடுவிப்பது தொடர்பாகக் கடந்த மாதம் மத்திய அரசு சார்பில் சென்னையில் உள்ள விலங்குகள் காப்பக துறைக்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த பூனையை வளர்க்க விரும்புபவர்கள் தத்தெடுத்து வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வந்த பூனை என்பதால், மக்கள் தத்தெடுக்க எவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள் என்பது போகப் போக தான் தெரியும்.

மற்ற செய்திகள்
