‘அவங்க எங்க அம்மா தான்’.. 4 வருச தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த போன் கால்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஹலோ போலீஸ் தொலைபேசி எண் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹலோ போலீஸ்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘ஹலோ போலீஸ் 83000 31100’ என்ற தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஹலோ போலீஸ் எண்ணுக்கு கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் சித்தாபூரில் அமைந்துள்ள மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில் இயங்கி வரும் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்து கவிதா என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ராமநாதபுரம்
அப்போது அவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 60) என்பவர் தங்களின் ஆசிரமத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து பேச்சியம்மாளின் மூத்த மகன் முனீஸ்வரனை அணுகி பேச்சியம்மாளின் புகைப்படத்தை காண்பித்துள்ளனர். புகைப்படத்தைப் பார்த்ததும், 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தனது தாய் பேச்சியம்மாள் என்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகா
இதனை அடுத்து பேச்சியம்மாளின் குடும்பத்தினர் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்றுள்ளனர். நீண்ட ஆண்டுகளாக பேச்சியம்மாளை காணமால தவித்த அவரது குடும்பத்தினர், அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர். பின்பு அவரை அங்கிருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
நெகிழ்ச்சி
இதுகுறித்து கூறிய ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், ‘ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹலோ போலீஸ் தொலைபேசி சேவை சிறப்பாக இயங்கி வருகிறது. அந்த தொலைபேசி எண் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சாயல்குடி பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்’ என கூறியுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண் ஹலோ போலீஸ் தொலைபேசி எண் மூலம், மீண்டும் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
