பல பெண்களுடன் தொடர்பு... மனைவியை கொலை செய்து நாடகம்.. தாத்தாவை கைது செய்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம்: ஆர்.எஸ் மங்கலத்தில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கொன்று விட்டு நாடகமாடியது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மடையை சேர்ந்தவர் சந்தியாகு (எ) சந்திரசேகர். இவரது மனைவி ஞானசவுந்தரி (80). சந்திரசேகர் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால், இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு சாப்பாடு வாங்க, ஆர்.எஸ்.மங்கலம் டவுண் பகுதிக்கு சந்தியாகு சென்றார்.
வீட்டில் மர்மமான முறையில் மரணம்
சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஞானசவுந்தரி தலையின் பின்புறம் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததாக சந்தியாகு ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தார். இதனையடுத்து, தகவலின் பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஞானசவுந்தரி தலையின் பின்பக்கம் காயம் இருப்பதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை எதற்காக கொன்றார்கள், கொன்றது யார்? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர் போலீஸ்.
வீட்டிற்குள் வந்த மோப்ப நாய்
பின்பு சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொலை நடந்த வீட்டை சுற்றி போலீசார் நோட்டமிட்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அதன் பிறகு ஞானசவுந்தரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஞானசுந்தரி கணவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கணவரிடம் விசாரணை
விசாரணையின் போது சந்தியாகு கொடுத்த தகவலின் படி, ஓட்டலில் வேலைசெய்து வந்த ஒரு நபரை போலீசார் தேடிச் சென்றனர். அந்த நபர் ஊருக்கு சென்றது தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், கணவரே மனைவியை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் முறையாக நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறியுள்ளார்.
பல பெண்களுடன் தொடர்பு
சந்திரேசகர் ஓய்வூதிய பணத்தை வைத்து கொண்டு விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து பழக்கம் பிடித்துள்ளார். உதவி செய்வதுபோல் நடித்து அவர்களை அணுகி மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி தவறான உறவு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர் பல பெண்களுக்கு பணத்தை செலவு செய்து வந்ததை அவரது மனைவி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
தாத்தா கைது
இதன் பின்பு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து திருப்பி பின்தலையில் அடித்து காயப்படுத்தி கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். யார் கொலை செய்தார்கள் போலீசார் குழம்பி வந்த நிலையில், கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்போது, சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
