திருடுன எல்லா பொருளையும் நீங்களே வச்சிக்கோங்க.. ஆனா இதை ஒன்ன மட்டும் திருப்பி கொடுத்திடுங்க.. கொள்ளையர்களிடம் தம்பதி வைத்த உருக்கமான வேண்டுகோள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொள்ளையர்களிடம் தம்பதியர் வைத்த உருக்கமான வேண்டுகோள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகரில் உள்ள ஒரு வீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிவிட்டனர். வெளியூருக்கு சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள், திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என சோதனை செய்துள்ளனர். அப்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததும் உயிரிழந்த தங்கள் மூத்த குழந்தையின் சாம்பல் கலசமும் கொள்ளைப் போனது தெரியவந்தது. இதனால் மிகுந்த சோகத்துக்கு உள்ளான தம்பதியினர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், ‘எங்கள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை கூட மீட்டுக் கொடுக்க வேண்டாம். ஆனால், தயவுசெய்து எங்கள் குழந்தையின் அஸ்தியை மட்டும் மீட்டுக் கொடுங்கள்’ என உருக்கமாக கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அந்த தம்பதிக்கு முதலில் பிறந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் சில மணிநேரங்களிலேயே இறந்துவிட்டது. இந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத அந்த தம்பதியினர், அந்த குழந்தையின் சாம்பலை 10 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளனர். இப்படி உள்ள சூழலில் அந்த அஸ்தி கொள்ளை போயிருப்பது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள போலீசார், ‘கொள்ளையர்கள் நிச்சயம் அந்த அஸ்திக் கலசத்தை எங்கேயாவது வீசியிருப்பார்கள். யாரேனும் அந்தக் கலசத்தை கண்டால் அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
