'கண் பார்வையை இழந்த நாய்...' 'மனநலம் பாதிக்கப்பட்டவரால் நடந்த அசம்பாவிதம்...' நாயை தத்தெடுத்த விலங்குநல ஆர்வலர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரும்பாக்கம் மெட்ரோ ரயில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் தாக்கப்பட்ட தெரு நாய் ஒன்று அறுவை சிகிச்சைக்கு பின் கண் பார்வை இழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் தெரு நாயின் தலையில் கல்லால் அடித்துள்ளார். இதனால் நாயின் கண்கள் வெளியே வந்து இரத்த வெள்ளத்தில் வலியோடு உயிருக்காக சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்துள்ளது அந்த நாய்.
அதனை கண்ட அங்கிருந்த பொதுமக்களில் சிலர் விலங்கு நல அமைப்புக்கு தகவல் கொடுத்ததோடு காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்து அதற்கு சிகிச்சை கொடுப்பதற்கு முயற்சி செய்தனர்.
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் இருக்கும் விலங்குநல ஆர்வலர் அஸ்வத்துக்கு (23) தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஸ்வத், இறக்கும் தருவாயில் இருந்த அந்த நாயை அரும்பாக்கம் காவல்துறையினர் உதவியுடன் மீட்டு வேப்பரி கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார்.
விசாரணையில் நாயினை கல்லால் அடித்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து, போலீசார் அவரை தண்டையார்பேட்டையில் உள்ள காப்பகத்தில் அஸ்வத் மற்றும் அவரது நண்பர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் அடிபட்ட நாயின் நிலை மோசமாகியுள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் நாயின் இரு கண்களும் அகற்றப்பட்டன. இதுவரை தெருக்களில் சுகந்திரமாக சுற்றி திரிந்த அந்த நாய் இனி எப்போதும் இருட்டில் வாழும் நிலை ஏற்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் விலங்குநல ஆர்வலர் அஸ்வத் அந்த நாயினை தத்தெடுத்து அதற்கு பைரவி எனவும் பெயர் சூட்டியுள்ளார். பைரவியை யாராவது தத்தெடுத்து வளர்க்க விரும்பினால் அவர் தருவதாகவும் இல்லையேல் அவரே பைரவியை வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அஸ்வத் இதுபோல் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாய்களை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அதற்கு சிகிச்சை அளித்து, பின்பு நாய் வேண்டுவோரிடம் அதனைக் கொடுத்து வருகிறார். மேலும் சில ஊனமான நாய்களைத் தனது வீட்டிலேயே வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

மற்ற செய்திகள்
