'9 கிலோ கோழியை கடிச்சு தின்னுருக்கு...' 'சிசிடிவியில் அந்த விலங்கு பதிவாயிருக்கு...' என்ன மிருகம் என உறுதி செய்த வனத்துறையினர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 26, 2020 09:57 PM

மணவாளக்குறிச்சி பகுதியில் ஒரு வாரகாலமாக ஆடுகளையும், வான்கோழிகளை வேட்டையாடி வந்த மிருகத்தை பிடிக்க ஊர் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

A carnivore who hunts domesticated animals in night

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக வளர்ப்பு பிராணிகள் மர்மமான முறையில் கடித்து கோதரப்பட்டு இறந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர்.

மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலுவைமுத்து (63). இவர் தனது வீட்டில் 2 ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த 18ம் தேதி காலை ஆடுகளுக்கு தீனி போட வந்த சிலுவை முத்துவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது இரு ஆடுகளும் வீட்டிற்கு வெளியே ரத்த காயங்களுடன் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. 

காவல்துறையினரிடம் புகார் அளித்த சிலுவை முத்துவின் வீட்டிற்கு மணவாளக்குறிச்சி போலீசார் மற்றும் வேளிமலை, பூதப்பாண்டி வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை  பார்வையிட்டனர். மேலும் அவரின் வீட்டை சுற்றி மர்ம விலங்கின் காலடிகள் பதிந்துள்ளதா எனவும் ஆய்வு  செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே 19-ம் தேதி   சுமார் 9 கிலோ எடையுள்ள வான்கோழியை ஆண்டார்விளையில் ஒரு வீட்டில் இருந்து மர்ம விலங்கு பிடித்து சென்றது.

20-ம் தேதியும் தனது வேட்டையை தொடர்ந்த மர்ம விலங்கு, இரவு தருவை நேசமணி என்பவர் வீட்டில் வளர்த்து வந்த ஆட்டை கடித்து இழுத்து செல்ல முயன்றுள்ளது. ஆனால் ஆடு நன்கு கட்டி போட்டிருந்ததால் அதைக் கொண்டு போக முடியவில்லை. ஆட்டின் சப்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கதவை திறக்கும் போது விலங்கு ஒன்று தப்பி ஓடியதை வீட்டினர் பார்த்துள்ளனர்.

நேசமணி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபின், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரவோடு இரவாக 2 இடங்களில் 4 கூண்டுகள் வைத்தனர். ஆனால் விலங்கு வராததால் அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், என்ன வகையான விலங்கு என்பதை கண்டறியவும் வனத்துறையினர் பிள்ளையார் கோவில் சந்திப்பை சுற்றி 6 இடங்களில் கேமராக்களை வைத்துள்ளனர்.

இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மரநாய் ஒன்று தோப்புக்குள் இருந்து வெளியே வந்து உலாவி விட்டு மீண்டும் தோப்புக்குள் சென்று மறையும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து மணவாளக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்றது இந்த மரநாய் தான் என வனத்துறையினர் உறுதி செய்தனர். 

அடுத்தகட்டமாக வீட்டு விலங்குகளை வேட்டையாடி வரும் மரநாயை பிடித்து காட்டில் கொண்டு விடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர் வனத்துறையினர்.

Tags : #DOG