‘ஊரடங்கை மீறி மண்டபத்தை பூட்டி நடந்த சுபநிகழ்ச்சி’.. ‘அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 07, 2020 12:30 PM

சிதம்பரம் அருகே ஊரடங்கை மீறி குடும்ப விழா ஒன்றில் ஏராளமானோர் கலந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mass gatherings at private function in Chidambaram during lockdown

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முன்னதாகவே திட்டமிடப்பட்ட சுபநிகழ்ச்சிகளை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே குடும்ப விழா ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டதால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தீட்சிதர் ஒருவரின் இல்ல சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது மண்டபத்துக்குள் இருந்தவர்கள் கதவை பூட்டிக்கொண்டு நிகழ்ச்சியை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவோம் என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து சிலர் மட்டும் மண்டபத்தைவிட்டு வெளியே வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.