'கொரோனாவுக்கு கூட வழி பொறந்துரும்' ... 'ஆனா இந்த முட்டாள்தனத்துக்கு' ... கடுப்பான ஹர்பஜன் சிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரசின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 - ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில், ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு டார்ச் லைட், அகல் விளக்குகள் ஏற்ற வேண்டி இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளின் படி நேற்றிரவு, இந்திய மக்கள் வீட்டில் இருந்தபடியே மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றினர். ஆனால் சிலர் தெருவெளிகளில் வந்து பட்டாசு வெடித்து எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் திருவிழா போல கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூர் பகுதியிலுள்ள மைதானத்தில் சிலர் பட்டாசு கொளுத்தியதில் அருகிலிருந்த வீட்டின் மாடியில் சென்று விழுந்துள்ளது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தார்.
இதனை பகிர்ந்த ஹர்பஜன் சிங், மக்களின் செயல் கண்டு தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். 'கொரோனாவிற்கு கூட ஒரு தீர்வு கிடைத்துவிடும், ஆனால் இந்த மாதிரியான முட்டாள்தனமான செயல்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்' என குறிப்பிட்டிருந்தார். ஜெய்ப்பூரில் மட்டுமில்லாது இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மக்கள் பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
We Will find a cure for corona but how r we gonna find a cure for stupidity 😡😡 https://t.co/sZRQC3gY3Z
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 6, 2020
