‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’!.. கண்கலங்க வைத்த காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 04, 2020 02:22 PM

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு காவலர் ஒருவர் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லாமல் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Police Sub Inspector skip mother\'s funeral for coronavirus curfew

ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஷாண்டராம். இவர் கடந்த சனிக்கிழமை விஜயவடா ரயில்வே ஸ்டேசன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது தாய் சீதாமகாலட்சுமி (69) உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்காக அவருக்கு உடனே விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஷாண்டராம் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை.

இதுகுறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ஏன் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என விசாரித்துள்ளார். அதற்கு காவலர் ஷாண்டராம், ‘தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவேண்டுமென்றால் 4 மாவட்டம், 40 ஷெக்போஸ்டுகளை தாண்டி செல்ல வேண்டும். அங்கு சென்றால் அதிக மக்களுடன் பேச வேண்டி வரும். ஒருவேளை இதனால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் எனது தம்பியிடம் தாயின் இறுதி சடங்கை செய்ய சொன்னேன். இதை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்து என்னை நானே ஆற்றிக்கொண்டேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பேசிய இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ‘இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஷாண்டராமுக்கு லீவ் கொடுக்கப்பட்டும் கொரோனா பரவலை எண்ணி தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை. தயவு செய்து எங்களது நிலைமையையும் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள். நம்மால் கண்டிப்பாக கொரோனா வைரஸை சமாளிக்க முடியும்’ என பேசியுள்ளார்.