'இப்போ வெளிய வாங்க பாக்கலாம்' ... 'இனிமே வெளிய சுத்துனா ஆப்பு தான்' ... அரியலூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிபவர்களை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் கையாண்டுள்ள புதிய திட்டம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு போலீசார் பல்வேறு நூதனை தண்டனைகளையும் வழங்கி வருகின்ற போதும் மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமல், வைரஸின் ஆபத்தை அறியாமல் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் மக்கள் தேவையில்லாமல் சுற்றித் திரிவதைத் தடுக்க அரியலூர் மாவட்டம் புதியதொரு முயற்சியை கையாண்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம பஞ்சாயத்துகளின் 1,97,614 குடும்பங்களுக்கு அனுமதி சீட்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் ரத்னா. மூன்று நிறங்களில் இந்த அனுமதி சீட்டு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் பச்சை வண்ண அட்டை வைத்துள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமையும், நீல வண்ண அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும், ரோஸ் வண்ண அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியில் கூடுவதை தவிர்க்க முடியும்.
இந்த விதியை மீறி வெளியில் நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் இந்த திட்டம் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.