'மது' கிடைக்காததால் புதிய வழி ... வார்னிஷில் 'எலுமிச்சை' கலந்து ... இறுதியில் நண்பர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான மளிகை மற்றும் காய்கறி கடைகள் போன்றவை மட்டுமே செயல்பட்டு வருகிறது. மேலும், ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல தவறான வழிகளைத் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் கேட் கீப்பராக பணியாற்றி வருபவர்கள் பிரதீப் மற்றும் சிவசங்கரன். இவர்களின் நண்பனான சிவராமன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மதுக்கடைகள் எதுவும் இல்லாத நிலையில், சில தினங்களுக்கு முன் இவர்கள் மூவரும் பெயிண்டில் கலக்கும் வார்னிஷுடன் எலுமிச்சை பலத்தை கலந்து குடித்துள்ளனர். இதனால் மூவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக பிரதீப் மற்றும் சிவசங்கர் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மயக்கம் தெளிந்த சிவராமன், வார்னிஷில் எலுமிச்சைப்பழத்தை நாங்கள் கலந்து குடித்தோம் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் சிவராமனும் உயிரிழந்து விட்டார்.
மது கிடைக்காத காரணத்தால் வார்னிஷில் எலுமிச்சைப்பழம் கலந்து குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.