'ஒரு முடி வழியா கூட வர பெர்மிஷன் தர மாட்டோம்...' கொரோனா வைரஸ் வந்துவிடக்கூடாது என போட்டுக்கொண்ட 'மாஸ்' மொட்டை...! 'பாலிஷ்' தலையோடு ரோந்து சென்ற போலீசார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவும் என்கிற பயத்தின் காரணமாக இன்ஸ்பெக்டர் உட்பட 75 போலீசார் மொட்டை அடித்துக் கொண்டு ரோந்து சென்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் பதேபூர் சிக்ரி காவல் நிலைய போலீசார் சிலர், கொரோனா வைரசிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தலையை மொட்டைப் போட்டுக்கொண்டனர். இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் பாலியன் உட்பட 75 போலீசார் மொட்டையடித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் ரோந்து சென்றனர். அவர்கள், வாயில் முகக்கவசங்களை அணிந்து கொண்டு சென்றனர். மொட்டைத் தலையுடன் வலம் வந்த போலீசாரை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘‘எந்நேரமும் தலையில் தொப்பி, ஹெல்ெமட் போன்றவை அணிந்திருப்பதால், கொரோனா வைரசும் உச்சந்தலையில் ஒட்டக்கூடும் என்று ஒரு மருத்துவர் கூறினார்.
வைரஸ் கிருமி, முடியின் வழியாக உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறினார். ஒரு முடி வழியாக கூட வந்துவிடக் கூடாது என மொட்டையடித்துக் கொள்ள முடிவு செய்தோம். இதற்கு முழு காவல் நிலைய போலீசாரும் ஒப்புக் கொண்டனர். அதில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமித் குமார், ஒன்பது துணை ஆய்வாளர்கள், பதினைந்து தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் 49 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் அடங்குவர்’ என்றார்.
இதைப்பற்றி எஸ்.என் மருத்துவக் கல்லூரியின் மூத்த நுண்ணுயிரியலாளர் சஞ்சீவ் சவுத்ரி கூறும்போது, ‘‘மொட்டையடித்துக் கொள்வதாலும், ‘ஷேவிங்’ ெசய்து கொள்வதாலும் கொரோனா தொற்று அபாயத்தைக் குறைக்கும் என்று எந்த ஆய்வும் இல்லை. அவை, கண்கள், மூக்கு, வாய் வழியாக உடலை அடைகிறது.
கொரோனா வைரஸ் பாதித்த நபர் அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களை தொட்டுவிட்டு நமது கண், மூக்கு அல்லது வாயில் தடவினால் மட்டுமே ஆபத்து உள்ளது. நம் உடலில் எந்த பாகத்தை தொட்டாலும் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
