'யாருக்கும் தெரியாமல் வரும் காதல் ஜோடிகள்தான் எங்க டார்கெட்'.. தஞ்சையை நடுங்க வைத்த முகமூடிக் கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 19, 2019 12:07 AM
தஞ்சை பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலை அருகே உள்ள ரவுண்டானா பகுதிக்கு அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தனிமையில் ரிலாக்ஸ் செய்யச் செல்லும் கணவன் - மனைவி, காதல் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளைக் குறிவைத்து பணம், நகை முதலானவற்றை வழிப்பறி செய்வதோடு பாலியல் பலாத்காரமும் செய்து வந்த முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் கொஞ்ச காலமாக திணறி வந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த கெல்வின் என்கிற பொறியியாளரை வழிமறித்து நகைப்பறிப்பில் இந்த கும்பல் அண்மையில் ஈடுபட்டது. இதுகுறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது, மானோஜிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சிக்கியுள்ளார்.
அவரை விசாரித்தபோதுதான் இந்த குற்றக்கும்பலின் தலைமையே அவர்தான் என்று தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ், ‘நானும் என் நண்பர்கள் 3 பேரும் இரவு 7 மணிக்கு இந்த பகுதியாக வந்துவிடுவோம். இரவு 10 மணிக்கு மேல் முகமூடி அணிந்துகொண்டு மறைந்துகொண்டு, இவ்வழியே இருசக்கர வாகனத்தில் வருபவர்களை மறித்து பணம், நகைகளை பறிப்போம். சில சமயம் இப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் தத்தம் காதலிகளை அழைத்துக்கொண்டு வரும்போது, சில கள்ளக்காதல் ஜோடிகள் வரும்போது நாங்கள் போதையில் இருந்தால் அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்வோம். ஆனால் செல்போன்களை வைத்து போலீஸ் எங்களை பிடித்துவிடுவார்கள் என்பதால் அதை மட்டும் நாங்கள் செய்வதே இல்லை’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்ட காதல் ஜோடிகள், யாருக்கும் தெரியாமல் இவ்விடங்களுக்கு வருவதால், அவர்கள் போலீஸாரிடத்திலும் புகார் அளிக்காமல் இருந்திருக்கக் கூடும் என ரமேஷ் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
