‘நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்ததால்’... ‘உயிருக்கே வினையாகிப் போன விபரீதம்’... ‘2 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த உண்மை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 14, 2020 09:53 AM

தவறான பழக்கத்துக்கு கணவர் தடையாக இருந்ததால், மனைவியே, காதலன் துணையுடன் கார் ஏற்றி கொலை செய்தது, இரண்டு மாதங்களுக்கு பிறகு அம்பலமாகி உள்ளது. 

Man murdered by wife and friend due to illicit affair

புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் 41 வயதான கந்தசாமி.  இவர் தொண்டமா நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 7 மற்றும் 4 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்கிற அஜித்குமார்  என்பவருடன் கந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி, தனது நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் கந்தசாமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அஜித்குமார் விதவிதமான திண்பண்டங்களுடன், பரிசு பொருட்களை கொடுத்ததால், அஜித்குமாருக்கும், புவனேஷ்வரிக்கும் தவறான காதல் உருவாகியுள்ளது. மணிக்கணக்கில் செல்ஃபோனிலும் பேசியதால், இதையறிந்த கந்தசாமி, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு போன மனைவியை அழைத்துவர கந்தசாமி போனபோது, அங்கு புவனேஷ்வரியின் சகோதரர், கந்தசாமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நண்பனால் வாழ்க்கை பறிபோனதை அறிந்து விரக்தியடைந்த நிலையில் இருந்த கந்தசாமி,  கடந்த மார்ச் 14-ம் தேதி, தொண்டமாநத்தம் பகுதியில் இருந்து பத்துக்கண்ணு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதே திசையில் அதிவேகத்தில் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மார்ச் 17-ம் தேதி உயிரிழந்தார்.

கந்தசாமி விபத்தில் பலியானதாக வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், கணவர் இறந்தது பற்றி புவனேஷ்வரி கவலையில்லாமல் இருந்ததும், கந்தசாமி இறப்பிற்கு பிறகும் அவரது வீட்டிற்கு அஜித்குமார் அடிக்கடி வந்து சென்றதும் உறவினர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், கந்தசாமியின் தாய் தனது மகன், தன்னிடம் செல்ஃபோனில் அளித்த மரண வாக்குமூலம் 10 நிமிட ஆடியோவை போலீசாரிடம் கொடுத்துள்ளார். விபத்து நடப்பதற்கு ஒருவாரம் முன்பு ரெக்கார்ட் செய்யப்பட்ட அந்த ஆடியோவில், தனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு காரணம் அஜித்குமாரும், தனது மனைவி புவனேஷ்வரி மற்றும் அவரது குடும்பமே காரணம் என்று அதில் கூறியிருந்தார்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் விபத்து வழக்கை தீவிரமாக விசாரித்தனர். அதில், நடந்தது விபத்து அல்ல என்றும், முறையற்ற காதலுக்கு தடையாக இருக்கும் கந்தசாமியை தீர்த்துக்கட்ட அஜித்குமார் மற்றும் புவனேஷ்வரி திட்டமிட்டு, அதன்படி பைக் மீது காரை மோதி கந்தசாமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் அம்பலம் ஆகி உள்ளது. அஜித்குமார் ஏற்பாட்டின்படி, லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் காரை ஓட்டி வந்து, கந்தசாமி மீது மோதி கொலை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து, 3 பேரையும் கைதுசெய்துள்ள போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். அஜித்குமாருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.