'பிள்ள போல பாத்துக்கிட்டாரு'... 'ஊழியர்களின் கண்முன்பே கதறிய காளி'...'தும்பிக்கையால் சுழற்றி சுவரில் அடித்து'... முருகன் கோவிலில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பரங்குன்றம் கோவில் யானைப் பாகனைச் சுவரில் அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெய்வானை என்ற பெயரில் பெண் யானை ஒன்று உள்ளது. இந்த யானையானது கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு அசாம் மாநில வனப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது. 10 வயதிலிருந்து திருப்பரங்குன்றம் கோவில் வளர்க்கப்பட்டு வருகிறது.
யானை கோவிலுக்குக் கொண்டு வரப்பட்ட ஆரம்பக் காலத்தில் முரண்டு பிடித்ததாகவும், பின்பு பாகன்கள் கொடுத்த பயிற்சியால், சில மாற்றங்கள் ஏற்பட்டு ஒத்துழைக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், யானையைப் பராமரித்தும், பாகன்கள் அவ்வப்போது பயிற்சியும் கொடுத்து வந்தனர். யானையைத் துணை பாகன் காளி என்ற காளஸ்வரன் அன்போடு பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள யானை மண்டபத்தில் தெய்வானை யானையைக் குளிக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அப்போது யானை திடீரென ஆவேசம் அடைந்து பிளிறியுள்ளது. இதனைக் கண்ட பாகன் காளி சுதாரிப்பதற்குள், யானையின் தும்பிக்கை பிடியில் அவர் சிக்கிக் கொண்டார். யானையிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் கதறினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில், பாகன் காளியைத் தூக்கி சுவரில் மாறி மாறி அடித்தது. பின்னர் தனது கோபம் தீராமல் காலால் எட்டி உதைத்து.
பாகன் காளியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த துணை பாகன் ராஜேஷ், யானையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் கடும் கோபத்திலிருந்த யானை அவரையும் தாக்க முயற்சி செய்துள்ளது. உடனே அவர் கோவில் சுவரில் ஏறி உயிர் தப்பினார். இதையடுத்து அங்கு ஓடி வந்த மற்ற ஊழியர்கள் யானை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார். அதன்பின் யானையின் கோபம் சற்று தணிந்தது. அதுவரை பலத்த காயத்துடன் கிடந்த பாகன் காளியை அவர்களால் மீட்க முடியவில்லை.
சிறிது நேரம் கழித்து யானையின் கோபம் தணிந்ததை உறுதி செய்த பின்னர்தான், அவரை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். கால்நடை மருத்துவர்கள் விரைந்து வந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். குழந்தை போலப் பார்த்துக் கொண்ட பாகனை, கோவில் யானை அடித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
