200 கிமீ நடந்து ‘கால் வலி’.. ‘லிப்ட்’ கேட்டு லாரியில் ஏறிய அரைமணி நேரத்தில் விபத்து’.. 24 பேர் பலியான கோரவிபத்தின் பகீர் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 16, 2020 04:41 PM

உத்திரபிரதேசத்தில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

24 migrants killed, many injured in truck accident in Auraiya

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே சென்றுகொண்டு இருக்கின்றனர். இதனால் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 16 வெளிமாநில தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் உத்தரபிரதேசத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக உத்தரபிரதேசத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து லக்னோவுக்கு நடந்து சென்றுள்ளனர். லக்னோவில் இருந்து ரயில் பிடித்து ஊருக்கு செல்லலாம் என நினைத்து சுமார் 200 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளனர்.

இரவு அவுரியா பகுதியை வந்தடைந்த அவர்களுக்கு கால் வலிக்கவே, அந்த வழியே கோதுமை ஏற்றி வந்த லாரியில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளனர். அவர்கள் அனைவரும் லாரியில் ஏறிய அடுத்த அரை மணி நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் எதிரே வந்த லாரி ஒன்று கட்டைப்பாட்டை இழந்து வேகமாக வந்துள்ளது. இதனால் அந்த லாரியின் மீது மோதுவதை தவிர்க்க இந்த லாரி டிரைவர் எவ்வளவோ முயன்று பார்த்துள்ளார். ஆனால் இரு லாரிகளும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சோகம் என்னவென்றால் விபத்தில் காயமடைந்த அவர்களுக்கு உதவி செய்ய அங்கு யாரும் இல்லை. ஊரடங்கு காரணமாக அதிகாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால், உதவியின்றி பலர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.