சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களை கொரோனாவிடம் இருந்து காப்பது எப்படி?.. வெளியான பரபரப்பு தகவல்!.. அடுத்து இரண்டு மாதங்களுக்கு இப்படித்தான் இருக்குமாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளில் 70 சதவீதத்தைத் தாங்கி நிற்கும் 7 மாநிலங்களில் உள்ள சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களில், அடுத்த 2 மாதங்களுக்கு சுகாதாரத்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தயாராக வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
![mohfw directs states with guidelines to contain covid19 mohfw directs states with guidelines to contain covid19](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/mohfw-directs-states-with-guidelines-to-contain-covid19.jpg)
மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 முக்கிய நகரங்களில், நாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
இந்த 11 மாநகரங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், குடிசைப் பகுதிகளில் கண்காணித்தல், மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்கள், கொரோனா அதிகமாகப் பரவும் திரள் இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து தீவிரமான சுகாதாரத்துறை கண்காணிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக 7 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், 11 மாநகரங்களின் சுகாதார ஆணையர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுடான் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த 11 மாநகரங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்களை அதிகப்படுத்துவதும், இறப்பு வீதத்தைக் குறைப்பதும் பெரும் சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் இந்த 11 நகரங்களில் கொரோனா உறுதி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:
''தேவைப்பட்டால் மாநில அரசுகள், தனியார் ஆய்வுக்கூடங்களுடன் கூட்டாகச் சேர்ந்து மாதிரிகளை சேகரித்தல், படுக்கை வசதிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தப்படுத்துதல், கழிவு மேலாண்மை, முகாம்களைப் பராமரித்தல், மேலாண்மை செய்தல், விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்றவற்றைச் செய்யலாம்.
குறிப்பாக உள்ளூர் மொழிகளில் மக்களுக்குப் புரியும் வகையில் சமூகத் தலைவர்கள், இளைஞர் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றைக் கண்காணிப்புப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் களமிறக்கி கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த 11 மாநகரங்களில் வாழும் முதியோர், நீண்டகாலத் தொடர் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருவோர், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆகியோர் இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனமும், பரிசோதனையும் நடத்தப்பட்டு, இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும்.
பல்வேறு மாநில அரசுகள் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையைத் தொடங்கியுள்ளன. அதேபோல மற்ற மாநிலங்களும் தொடங்கி, மக்களுக்கு உதவிகள், ஆலோசனைகள் மட்டும் வழங்காமல் பல்வேறு வசதிகளையும், கோவிட்-19 மேலாண்மைப் பணிகளையும் செய்ய வேண்டும்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)