'எப்பவும் ஒண்ணாவே இருப்போம்ன்னு சொல்வீங்களே'... 'தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்'... நிலைகுலைந்த மொத்த குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 16, 2020 10:59 AM

தாயின் கண்முன்பே இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

Trichy : Twin Sisters Drowns In River While taking Bath

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை, விவசாயி. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் பின்பு பிறந்த ராமு பிரியா(வயது 9), லட்சுமி பிரியா (9) ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள். இருவரும் வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் உள்ள கும்படிக்குளத்தில் சகோதரிகள் இருவரும், தங்கள் தாயுடன் குளிக்க சென்றுள்ளார்கள். இருவரின் தாய் துணி துவைத்துக் கொண்டிருந்த நிலையில், இரட்டை சகோதரிகள் இருவரும் நீரில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினார்கள்.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன கண்ணம்மாள், கதறினார். அப்போது கண்ணம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது கண்முன்பே தனது இரண்டு மகள்களையும் பறிகொடுத்து விட்டானே என கண்ணம்மாள் கதறி அழுதார். பிறப்பால் இரட்டையர்களாக இருந்த சகோதரிகள், இறப்பிலும் ஒன்றாகவே இணைந்த சம்பவம், அந்த குடும்பத்தை மட்டுமல்லாது, அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.