லாரி விபத்தில் பலியான ‘தாய்’.. கதறியழுத ‘கைக்குழந்தை’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாரி விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் பெண் தொழிலாளியின் குழந்தை தாயை காணாமல் கதறியழுத வீடியோ வெளியாகி கண்போரை கலங்க வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல மாநிலங்களில் வேலை பார்த்து வந்த வெளிமாநில தொழிலாளர்களின் வேலை இழப்பு ஏற்பட்டதால், அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் பலர் நடந்தும், சாலையில் செல்லும் வாகனங்களில் உதவி கேட்டும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சி-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 3 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவரின் கையில் கைக்குழந்தை ஒன்று அழுதபடி இருந்தது.
பின்னர் அவரிடம் விசாரிக்கையில், விபத்தில் இறந்த மூவரில் குழந்தையின் தாயும் ஒருவர் என தெரியவந்துள்ளது. லாரியில் பயணம் செய்த பெண் ஒருவர் இந்த குழந்தையை சரியாக பிடித்துக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பியது. குழந்தையின் தந்தை ஜான்சியில் இருப்பதாகவும், அதனால் குழந்தையை எங்கே விட்டு செல்வது என தெரியாமல் தவிப்பதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார். சுற்றிலும் முகம் தெரியாத நபர்களுக்கு மத்தியில் தாயை காணாமல் கதறியழுத குழந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
News Credits: NDTV