'பேஸ்புக்கில் காதல்'... 'பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்'... இதுதாண்டா காதல்ன்னு நிரூபித்த பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதல், திருமணம் குறித்து பெண்களுக்கு பல்வேறு கனவுகள் இருக்கும் நிலையில், கரூரில் இளம்பெண் செய்த திருமணம் குறித்துத் தான் அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள். அப்படி அந்த பெண் என்ன செய்தார் ?. அழகான காதல் கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் பவித்ரா. 23 வயதான இவர் டி.பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது, பேஸ்புக்கில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாகியுள்ளார். இவர் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழிலை விரிவுபடுத்த பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியபோது தான் பவித்ராவுடன் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இந்தநிலையில் விக்னேஷ்வரன் சுமார் 4 அடி மட்டுமே உயரம் கொண்டவர் என்பது பவித்ராவுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அது குறித்து சிறிதும் தயக்கம் கொள்ளாமல், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் இதற்கு மேல் என்ன இருக்கிறது, நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கைத் துணை எனக் கூறி பவித்ரா தனது உன்னதமான காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது தான் பிரச்சனை தலை தூக்கியது. பவித்ரா தனது காதலைப் பெற்றோரிடம் கூறிய போது, மகள் காதலிக்கும் காதலனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் நீ பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு என பவித்ராவை வற்புறுத்தியுள்ளார்கள்.
ஆனால் மனதால் இணைந்த நம்மை யாரும் பிரிக்கக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்துப் பெற்றோர், உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டுச் சென்றனர்.
ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர். காதலுக்கு மனம் தான் முக்கியம் என்பதைப் பேச்சில் அல்ல, செயலில் நிரூபித்த பவித்ராவை நாமும் மனதார வாழ்த்தலாம்.
