தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. ஆனால், எச்சரித்த வானிலை மையம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 06, 2019 05:39 PM
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஃபானி புயலால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. ஃபானி புயலால் மூன்று நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
திருச்சி, நெல்லையில் 104 டிகிரி செல்சியஸ், மதுரையில் 102 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 101 டிகிரி செல்சியஸ், சென்னையில் 100 டிகிரி செல்சியஸ், கோவையில் 96 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதேநேரம் மலைப்பிரதேசங்களான ஊட்டியில் குறைந்த பட்சமாக 70 டிகிரி செல்சியசும், கொடைக்கானலில் 73 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பாதிவாகி காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 செ.மீ மழையும், வேலூரில் 5 செ.மீ, கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 செ.மீ, அரூரில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.