மரப்பெட்டியில் ஒளிந்துக்கொண்டு கண்ணாமூச்சி.. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு.. மூச்சுத் திணறி சிறுமி பலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 04, 2019 06:21 PM

சென்னையில் மரப்பெட்டியில் ஒளிந்துகொண்டு, கண்ணாமூச்சி விளையாடிய 7 வயது சிறுமி, மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 year old girl dies while playing hide and seek in chennai

சென்னை திருவான்மியூர் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த திருப்பதி என்பவரது 7 வயது மகளும், 5 வயதான மற்றொரு மகளும் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளனர். திருப்பதி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவருடைய மனைவி வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தனர். சகோதரிகள் இருவரும் வீட்டில் இருந்த பெரிய மரப்பெட்டிக்குள் இறங்கி கதவை மூடி ஒளிந்துகொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக பெட்டியின் தாழ்பாள் மூடிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அவர்களால் கதவை திறந்து கொண்டு வெளியே வர முடியவில்லை.

வெகுநேரமாக குழந்தைகள் சத்தம் கேட்காததாலும், குழந்தைகளை காணாததாலும், திருப்பதிக்கு அவரது மனைவி தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் அச்சமடைந்தனர். இந்நிலையில் மரப்பெட்டிக்குள் இருக்கலாம் என்று சந்தேகமடைந்து மரபெட்டியை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மரப்பெட்டியின் உள்ளே இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதனையடுத்து உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 7 வயதான முதல் குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக தெரிவித்தனர்.  மேலும் 2-வது சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #ACCIDENT #HIDEANDSEEK