'செல்போன்'ல அப்படி என்ன தான் பாக்குற'?...'தாய் கேட்ட கேள்வி'...ஆத்திரத்தில் மாணவி செஞ்ச செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 29, 2019 08:38 AM

அதிகநேரம் செல்போனில் இருந்ததை தாயார் கண்டித்ததால், கோபத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl Commits Suicide After Mother Warns Against Playing Pubg

திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்த நிலையிலும், மகள் வித்யாஸ்ரீயை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். வித்யாஸ்ரீ திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வித்யாஸ்ரீ  ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் தினமும் காலையில் விளையாடுவது வழக்கம்.

சம்பவத்தன்று நேற்று காலை தனது செல்போனில் யாருடனோ சேர்ந்து ‘பப்ஜி கேம்’ விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அவரது தாய் 'காலையிலேயே செல்போனில் அப்படி என்ன பார்த்து கொண்டிருக்கிறாய்' என கோபமாக கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் 'படிக்காமல் இப்படி விளையாடி கொண்டிருக்கிறாயே' என திட்டிவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வித்யாஸ்ரீ அவரது தாயார் வெளியில் சென்றதும் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய தாய், கதவை திறக்குமாறு தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாக அவர் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய செய்தது. கடைக்கு சென்று விட்டு வந்த சிறிது நேரத்தில், மகள் பிணமாக தூக்கில் தொங்கியதை பார்த்த அவர், கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார், தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர்.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #COLLEGESTUDENT #SUICIDE #PUBG GAME #TIRUVOTTIYUR