'காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்’... ‘இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறித் துடிக்கும் பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 20, 2019 01:31 PM

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான ஒரு மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young woman committed suicide due to husband abandoned her

சென்னை ஆவடி அருகே உள்ள சி.ஆர்.பி.எப். பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ராஜா (62). ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். மருத்து அலுவலரான இவரது மகள் ராதா (23). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ராதா, சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (27) என்ற இளைஞரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு, இருவரது பெற்றோரும்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எனினும் அவர்களின் எதிர்ப்பை மீறி, கடந்த மாதம் திடீரென வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான பாலாஜி, திருமணமான ஒரு சில நாட்களிலேயே, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், ராதாவின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டு, அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மகனின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாலாஜியின் தந்தை முஸ்தபா, ராதாவின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு, பாலாஜிக்கும், ராதாவுக்கும் முறைப்படி திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, மகனை தம்முடன் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனால் ராதா பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். தந்தையுடன் சென்ற கணவர் பாலாஜி, அதன்பிறகு, ஃபோனில் ராதாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த ராதா, சாலிகிராமத்திற்கு தனது கணவரை நேரில் பார்க்கச் சென்றபோது, பாலாஜியும், அவரது தந்தையும் சேர்ந்து அவரை, அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த  ராதா,  தனது பெற்றோர் தேவாலயத்துக்கு சென்று இருந்த நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தேவாலயத்தில் இருந்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர், தங்கள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ராதாவின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #SUICIDE #CHENNAI #HUSBANDANDWIFE