‘சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்’.. ‘புதிதாக வெளிவந்துள்ள செல்ஃபோன் பதிவு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Nov 13, 2019 06:02 PM
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஐஐடி நிர்வாகம் உண்மையை மறைக்க முயல்வதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கடந்த சனிக்கிழமையன்று கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் எனும் முதலாமாண்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலேயே மனமுடைந்து ஃபாத்திமா இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கொல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மாணவியின் பெற்றோர் ஐஐடி நிர்வாகம் உண்மையை மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர், “எங்கள் மகள் ஃபாத்திமாவின் செல்ஃபோனில் சில பேராசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவளுடைய தற்கொலைக்கு அவர்கள்தான் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஃபாத்திமாவின் செல்ஃபோன் மெசேஜில் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமச்சந்திர காரா ஆகிய பேராசியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பேசிய அவர்கள் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பேசுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு சென்றபோதே அங்கிருந்த ஃபாத்திமாவின் செல்ஃபோனில் இந்தத் தகவல்களைப் பார்த்ததாகவும், தற்போது அந்த செல்ஃபோன் மீண்டும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. ஃபாத்திமாவின் பெற்றோர் கூறியுள்ள தகவல்கள் ஐஐடி வட்டாரத்திலும், கேரளாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.