‘திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன்’.. ‘சடலமாகக் கிடைத்த புதுமாப்பிள்ளை’.. ‘அதிர்ந்துபோய் நின்ற குடும்பத்தினர்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 19, 2019 04:37 PM

காதல் மனைவியிடமிருந்து தன்னை பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் புதுமாப்பிள்ளை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Kallakurichi A Month After Marriage Youth Commits Suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவருடைய மகன் தனுஷ்கோடி (19). இவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த ஃபென்னி என்ற பெண்ணிற்கு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் பெண் வீட்டாரின் சம்மதத்துடன் தனுஷ்கோடி ஃபென்னியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணம் முடிந்தபின் ஒரு வாரம் நாமக்கல்லில் தங்கியிருந்த புதுமணத் தம்பதி, தனுஷ்கோடியின் ஊருக்குச் சென்றுள்ளனர். பின் மீண்டும் ஃபென்னி வீட்டிற்குச் சென்றபோது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதையடுத்து ஃபென்னியின் பெற்றோர், “அவளுக்கு உடல்நிலை சரியானதும் நாங்களே அழைத்து வருகிறோம். நீங்கள் ஊருக்குச் செல்லுங்கள்” எனக் கூறியுள்ளனர். ஃபென்னியும் அதையே கூறியதால் தனுஷ்கோடி ஊருக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார்.

பின்னர் சின்னசேலத்துக்குத் திரும்பிய தனுஷ்கோடி தன் தந்தை காளியப்பனுக்கு ஃபோன் செய்து, “அப்பா ஃபென்னி என்னுடன் வரவில்லை. அவளுடைய பெற்றோர் என்னிடம் பேசிய விதத்தைப் பார்க்கும்போது என்னையும், ஃபென்னியையும் பிரித்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது. அவள்மீது என் உயிரையும், நிறைய பாசத்தையும் வைத்துவிட்டேன். அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. அதனால் நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தனுஷ்கோடியின் தந்தையும், உறவினர்களும் அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸார் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சின்னசேலத்திலிருந்து அம்மையகரம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே இருந்து தனுஷ்கோடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், தனுஷ்கோடி திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மனைவியிடமிருந்து தன்னை பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டுள்ளது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #TRAIN #KALLAKURICHI #SUICIDE #MARRIAGE #GROOM #LOVERS