'அப்படி என்ன சொல்லிட்டேன்'... 'எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா'?... கதறி துடித்த தந்தை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jan 06, 2020 09:04 AM
தோழியின் தந்தை இறப்பிற்கு செல்ல தந்தை சம்மதிக்காததால் இளம் பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு பிரியா என்ற பெண் இருக்கிறார். கூலி வேலை செய்த போதும் மகளை நன்றாக படிக்க வைத்த அவர், பிரியா தனது படிப்பை முடித்ததும் துபாயில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனிடையே துபாயில் தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டதாகவும், அந்த இறுதி சடங்கில் பங்கேற்க சென்னை செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை, இரவு நேரம், எனவே தனியாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என கூறி அனுமதி வழங்க மறுத்ததோடு, மகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தந்தையிடம் மீண்டும் மீண்டும் அனுமதி கேட்ட நிலையில், அவர் அனுமதிக்க மறுத்து விட்டார்.
இதனால் பிரியா விரக்திக்கு ஆளான பிரியா, வீட்டில் உருளை கிழங்கு தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். தந்தை வேலைக்கு சென்ற நிலையில் பிரியா வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பிரியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். தனியாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என கூறியதற்கு இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாயே என பிரியாவின் தந்தை கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொன்டு வருகிறார்கள். தோழியின் தந்தை இறப்பிற்கு துக்கம் விசாரிக்க செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.