‘என் குடும்பத்தை நீதான் பாத்துக்கணும்’!.. ‘வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்’!.. ஒரே நாள், ஒரே இடம் அண்ணன், தம்பி எடுத்த விபரீத முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 24, 2019 04:53 PM

தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Brothers commits suicide near Kasimedu in Chennai

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர்-ஜோஸ்வின்மேரி தம்பதி. இவர்களுக்கு இருதயராஜ் (29), ஆரோக்கிய ஆகாஷ் (24) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இருதயராஜ் பிடெக் படித்துவிட்டு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆரோக்கிய ஆகாஷ் பி.இ படித்துள்ளார். அண்ணன், தம்பி இருவரும் நெருங்கிய நண்பர்களைப் போல வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆரோக்கிய ஆகாஷ் தனது நண்பருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், ‘நான் இந்த உலகத்தைவிட்டு செல்கிறேன். என் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷின் நண்பர், உடனே போன் செய்துள்ளார். ஆனால் அதற்குள் ஆகாஷின் செல்போன் சுவிட் ஆப் ஆகியுள்ளது.

இதனால் அவரது அண்ணன் இருதயராஜுக்கு போன் செய்து தகவலை கூறிவிட்டு, நண்பனின் வீட்டுக்கு விரைந்துள்ளார். அதற்குள் இந்த தகவலை அறிந்த ஆகாஷின் உறவினர்கள் அவரது அறையை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் அறை உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மின்விசிறியில் ஆகாஷ் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆகாஷை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டதும் அண்ணன் இருதயராஜ் கதறி அழுதுள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்த தம்பியின் முகத்தை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதனை அடுத்து ஆகாஷின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே வீட்டுக்கு சென்ற இருதயராஜ் தம்பி தூக்கில் தொங்கிய அதே மின்விசிறியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரமாக இருதயராஜ் காணததால் அவரை உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். பின்னர் வீட்டில் சென்று பார்த்தபோது தம்பியின் அறை மீண்டும் உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. இதனை அடுத்து கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அங்கு இருதயராஜ் மின்விசிறியில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இருதராஜை பரிசோதித்தப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் அண்ணன், தம்பி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #CHENNAI #DIES #BROTHERS