'13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 21, 2019 12:52 PM
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கைப்பற்றிக்கொண்டு தந்தையை பெற்ற மகனே நடுத்தெருவில் விட்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சிம்சன்ராஜ். 75 வயதான இவருக்கு 3 மகன்கள். அதில் மூத்த மகன் தனிகுடித்தனம் சென்றுவிட, மனநலம் பாதித்த மற்றொரு மகன் விக்டர் ஞானராஜுடன் மூன்றாவது மகன் வால்டர் செல்வராஜ் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே சிம்சன்ராஜூக்கு சொந்தமான 13 வீடுகள் கொண்ட குடியிருப்பு, கடைகள் உள்ள வளாகத்தில் மாதந்தோறும் லட்சகணக்கில் வாடகை பணம் என பணத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இந்நிலையில் சிம்சன்ராஜின் மூன்றாவது மகன் வால்டர் செல்வராஜ், சுமார் ஒரு கோடி மதிப்புடைய அத்தனை சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தன்னையும், தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனையும் துரத்தி விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் குறைத்தீர்ப்பு முகாமில் மனு அளித்தார் முதியவர் சிம்சன்ராஜ். ஒரு கோடி சொத்துக்கு சொந்தகாரரான சிம்சன்ராஜ், தங்குவதற்கு இடமில்லாமல் மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் சாலையோரம் தஞ்சம் அடைந்திருப்பதாக கண்ணீருடன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வுச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.முதியவர் சிம்சன்ராஜுவுக்கும், அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வால்டர் செல்வராஜுவுக்கு உத்தரவிட்டார். அதையும் கொடுக்க முடியாது என கூறியதால், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் வால்டர் செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பெற்ற தந்தையையும் மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரனையும் தெருக்கோடியில் விட்ட வால்டர் செல்வராஜ், நிச்சயம் இருவரையும் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையை காசு, பணம் வந்த உடன் இப்படி நடு தெருவில் விட எப்படித் தான் மனசு வருகிறது, என்பது தான் வேதனையான உண்மை.