'பின்னால் வந்த லாரி'...'திடீரென போட்ட சடன் பிரேக்'... கனநொடியில் நேர்ந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 12, 2019 07:17 AM
பெண் ஒருவர் நிலை தடுமாறி விழுந்ததில் அவர் மீது லாரி மோதி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடி கம்பம் விழுந்தது தான் அந்த பெண் விபத்தில் சிக்க காரணம் என அந்த பகுதி மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்கள்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல தனது பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது எதிர்பாராதவிதமாக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத அவர், சுதாரித்து கொண்டு சடன் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது அவரது இருசக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்ததில், அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனிடையே விபத்து குறித்து பேசிய அவரது உறவினர்கள், அந்த பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமணத்திற்காக அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணம் என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சட்டியுள்ளார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்