ஹாஸ்டல் ரூமில்... விபரீத முடிவு எடுத்த மாணவி... உறைந்து நின்ற பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jan 12, 2020 11:25 AM
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நிவேதிதா (23). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தாவரவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி சேர்ந்ததிலிருந்தே நிவேதிதா, பல்கலைக்கழகத்தின் விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் மாணவியர்கள், விடுதி காப்பாளருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இரவு 10:00 மணிக்கு, மாணவியின் தந்தை திருமலை, தாய் செந்தமிழ்ச்செல்வி ஓடி வந்தனர். மாணவியின் உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அதன்பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக மாணவியின் உடலை, மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் மாணவி நிவேதிதாவுக்கு, அவரது துறையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக விடுதி முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.