‘ஆஸ்திரேலியால வேலை வாங்கித் தரேன்’!.. ‘6 பெண்களுடன் கல்யாணம்’.. கண்பார்வை இல்லாதவரின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 09, 2020 04:42 PM

சேலத்தில் கண்பார்வை குறைப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Salem blind man arrested by police for cheating case

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த சின்ன அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (40). இவர் மீது அம்மாப்பேட்டைச் சேர்ந்த ஆஷிப் அலி (24) என்ற இளைஞர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் மீது இதேபோல் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பலர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் டேவிட்டை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இதுவரை தான் 6 பெண்களை திருமணம் செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், கண்பார்வை குறைபாடு உள்ள டேவிட், கையில் குச்சியுடன் தட்டுதடுமாறி செல்லும்போது அவருக்கு சில பெண்கள் கையை பிடித்து உதவி செய்துள்ளனர். அந்த சமயம் அப்பெண்களிடம் தனக்கு ஆஸ்திரேலியாவில் சில நண்பர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் மூலம் தங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்றும் பேச்சு கொடுத்துள்ளார். இதனை சாதாரணமாக தவிர்த்துவிட்டு செல்லும் பெண்களை விட்டுவிடுகிறார். ஆர்வமாக கேட்கும் பெண்களிடம் செல்போன் எண்ணையும், வேலைக்காக எனக் கூறி லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுள்ளார்.

அந்த பணத்தை வைத்துகொண்டு பல்வேறு ஊர்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் 6 பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் குடும்பமும் நடத்தி வந்துள்ளார். பெண்களிடம் மட்டுமல்லாமல் ஆண்களிடமும் இதேபோல் பேசி பணத்தை வாங்கியுள்ளார். அதில் ஆஷிப் அலி என்ற இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால் ஆஷிப் அலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டேவிட்டை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்பார்வை இல்லாத அனுதாபத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SALEM #POLICE #CHEATING #BLINDMAN