'கொலை செய்து விட்டு மகளின்...' 'ரொம்ப நாளாவே நரபலி கொடுக்க திட்டம் போட்ருக்கார்...' நெஞ்சை உறைய செய்யும் அதிர்ச்சி தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதையல் கிடைத்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என பெண் மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது பெத்த மகளையே தந்தை நரபலி கொடுத்த சம்பவம் சமீபத்தில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நொடியூர் கிராமத்தில் கட்டட வேலை செய்து வருபவர் பன்னீர். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மே 18 பதினெட்டாம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா(13) அருகில் உள்ள குளத்தில் நீர் எடுத்து வர சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வித்யா வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியுள்ளனர்.
அப்போது தைல மரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் கிழிந்த நிலையில், முகத்தில் காயத்துடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் பதறி போய் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பின், சிகிச்சை பலனின்றி கடந்த மே பத்தொன்பதாம் தேதி வித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது, அதில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
போலீசார் நடத்திய விசாரணையில் வித்யாவின் அப்பா பன்னீர் அளித்த பதில்களில் சந்தேகம் அடைந்த போலீசார் பன்னீரிடம் விசாரணையை முடுக்கினர். அப்போது தானும், இரண்டாவது மனைவியும் சேர்ந்து புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி என்ற பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து பன்னீரை கடந்த ஜீன் 01-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம்(VAO) சரணடைந்தார். பன்னீருக்கு ஆசை வார்த்தை காட்டி மகளை நரபலி கொடுக்க சொன்ன மந்திரவாதி வசந்தியை இன்று (04.06.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் பெரிய கோடீஸ்வரன் ஆகா வேண்டும் என்று பன்னீர் வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அப்போது மவசந்தி 'உன் மகளை நரபலி கொடுத்தால்நீ பெரிய பணக்காரன் ஆவாய், புதையல் கிடைக்கும், சமூகத்தில் உன்னுடைய செல்வாக்கு பெருகும்' எனக் கூறியுள்ளார். இந்த வார்த்தைகளை நம்பி பெற்ற மகளை நரபலி கொடுக்க திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த மே மாதம் 18-ம் தேதி காலை ஏழு மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி சொல்லியுள்ளார். இளைய மகள் வித்யா 'அக்கா நீ வீட்லையே இரு, நானே போய் தண்ணீர் கொண்டு வருகிறேன்' என கிளம்பியுள்ளார். சிறுமியை பின் தொடர்ந்து அடர்ந்த பகுதிக்கு சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை வலுக்கட்டாயமாக பிடிக்க துணியில் கழுத்தை மேலும் இறுக்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க பாலியல் வன்கொடுமையால் நடந்த நிகழ்வு போல நம்ப வைப்பதற்காக பன்னீர் தனது பெற்ற மகளின் ஆடைகளை களைந்து அப்பகுதியில் போலீசார் கண்ணில் படும்படி தூக்கி வீசிவிட்டு மகள் இறந்து விட்டதாக நம்பிக்கையுடன், எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு போயுள்ளார். ஆனால், சிறுமி இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தததை கண்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பன்னீர் நெடு நாட்களாக மிகவும் ஆழமாக திட்டம் தீட்டி இந்த படுகொலையை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.