'பழத்துல ஊசிய இறக்குறது போல பேசுவான் சார்'...'கணவரோடு டைவர்ஸ்'... மேட்ரிமோனி மூலம் சென்னை இளைஞர் விரித்த வலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேட்ரிமோனி மூலம் பழகும் ஒருவர் குறித்துத் தீர விசாரிக்காமல் பழகினால் எது மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் பெரும் உதாரணமாக அமைந்துள்ளது.
சென்னை திருவெற்றியூரில் உள்ள இளம் பெண் ஒருவர் தனது கணவரோடு விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது திருமணத்திற்குப் பதிவு செய்யும் மேட்ரிமோனி மூலம் வியாசர்பாடியைச் சேர்ந்த அஜ்மல் என்ற இளைஞர் அந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து இருவரும் பேசி பழகி வந்துள்ளார்கள். அஜ்மலில் பேச்சில் அந்த பெண் உருகிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
அந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் இருந்து 15 சவரன் நகை, 2.50 லட்சம் ரொக்க பணத்தை அஜ்மல் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அஜ்மலின் நடவடிக்கைகளில் அந்த பெண்ணிற்குச் சந்தேகம் வந்த நிலையில், தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை அந்த பெண் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது தான் அஜ்மலில் உண்மையான முகம் அந்த பெண்ணிற்குத் தெரியவந்தது. இளம் பெண் கொடுத்த நகை மற்றும் பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுத்த அஜ்மல், மீறிக் கேட்டால் தன்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து என்ன செய்யலாம் என யோசித்த அந்த பெண், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அஜ்மலின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த, அந்த பெண்ணின் குடும்பத்தினர், அங்குச் சென்று அஜ்மலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள். அப்போது அஜ்மலின் போனை வாங்கி, அந்த பெண் தொடர்பான புகைப்படங்களை அழிக்கலாம் எனப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் பல பெண்களோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியது. இதையடுத்து அஜ்மல் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. மேட்ரிமோனி மூலம் வரன் தேடுபவர்கள் சம்மந்தப்பட்ட நபர் குறித்து நன்கு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற நபரின் பின்புலம் தெரியாமல் பழகி பணம் மற்றும் நிம்மதியைத் தொலைப்பது தான் மிச்சம்.