'ஹலோ... நாங்க லண்டன்ல இருந்து கால் பண்றோம்!'... ஆன்லைன் மூலம் சம்பாதிக்க... ஆசை வார்த்தை காட்டிய ஈரோடு இன்ஜினியர்கள்!... கோடிக்கணக்கில் மோசடி... வேற லெவல் ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 31, 2020 12:03 PM

இணையதளம் மூலம் போலீஸ்காரர் உட்பட பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய ஈரோடு என்ஜினீயர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

erode engineers involved in cyber crime loot millions

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவலராக பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சுரேஷ். அவரது நண்பர் பரமக்குடி அருள்ராஜன். இவர்கள் இருவரும் இணையதளத்தில் அந்நிய செலாவணி பணபரிமாற்றத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க விரும்பி உள்ளனர். இதுபற்றி இணையதளம் மூலம் அறிந்த லண்டனை சேர்ந்த அந்நிய செலாவணி பணபரிமாற்ற நிறுவனத்தினர் ஆன்டர்சன் மற்றும் அபிஸ் ஆகியோர், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக தங்களின் ஏஜெண்டுகளான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் பிரவீன்குமார் மற்றும் விசுவநாதன் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதை நம்பிய சுரேஷும், அருள்ராஜனும் அவர்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறியபடி, கடந்த ஆண்டு இணையதள வங்கிப் பரிவர்த்தனை மூலம் சிறிது, சிறிதாக சுரேஷ் ரூ.49.72 லட்சமும், அருள்ராஜன் ரூ. 7.50 லட்சமும் செலுத்தினர்.

இந்த சூழ்நிலையில் இவர்களின் கணினியை அடுத்தவர் கணினியில் இருந்து இயக்கும் தன்மை கொண்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி, அவர்களின் பணம் முழுவதையும், பிரவீன்குமார், விசுவநாதன் ஆகியோர் ஒரேநாளில் அபகரித்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து இருவரது புகாரின் பேரில் எஸ்பி வீ. வருண்குமார் உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணை நடத்தி ஈரோட்டை சேர்ந்த பிரவீன்குமார், விஸ்வநாதனை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 9.70 லட்சம், 25 வங்கி அட்டைகள், 9 மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், பலரிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாயை மின்னணு பண பரிவர்த்தனையான மின்னணு காசு எனப்படும் பிட்காய்ன் வடிவில் வைத்துள்ளது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களின் மின்னணு முகவரியை வாங்கி அதில் இருந்து சுமார் ரூ.1 கோடிக்கான பிட்காய்ன் மதிப்புகளை போலீசார் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இவர்கள் இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : #CYBERATTACK #ERODE #HACKING #FRAUD #ONLINE