'பீகாருக்கு போய்ட்டு வந்து ஒரே சளி, இருமல்'... 'கவனிக்காமல் இருந்த மில் ஓனர்'... ஈரோட்டில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மில்லில் பணியாற்றிய பீகார் தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், கலெக்டர் நேரில் சென்று மில்லை மூடுமாறு உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி போத்தநாயக்கன் புதூரில் சேகர், கருப்புசாமி ஆகியோரின் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 2 பேர் பண்டிகைக்காக தங்களின் சொந்த ஊரான பீகாருக்கு சென்று விட்டு 2 நாட்களுக்கு முன் மீண்டும் வேலைக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் வந்ததிலிருந்து ஒருவருக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வர கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், பவானி தாசில்தார் பெரியசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவ குழுவினர் மில்லில் தங்கி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்தனர். இதனை தொடர்ந்து பீகார் சென்று திரும்பிய 2 தொழிலாளர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் ககிரவன் மில்லை நேரடியாக ஆய்வு செய்தார். அதன்பிறகு மில்லை மூடுமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மில் சீல் வைக்கப்பட்டது. மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கவனக்குறைவாக செயல்பட்ட மில் உரிமையாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர், மில் உரிமையாளர்கள் குடும்பத்தினர் உள்பட 9 பேரையும் தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
