'நடந்து தான் ஸ்கூலுக்கு போணும்' ... 'பஸ்' விட சொல்லுங்க 'நாங்க' கெளம்புறோம் ... களத்தில் இறங்கிய பள்ளி 'மாணவ - மாணவிகள்' !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 05, 2020 06:13 PM

பவானிசாகர் அருகே பள்ளிக்கூட நேரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டி பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

School Students starts protest in Erode district

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பள்ளிக்கூட மாணவ மாணவிகள், பவானிசாகர் மற்றும் தொட்டம்பாளையம் பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவ மாணவிகள் திடீரென பவானிசாகர் - பண்ணாரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீஸாரிடம் மாணவ மாணவிகள் கூறும் போது, 'நாங்கள் பவானிசாகர் மற்றும் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். காலை நேரத்தில் எங்கள் கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. இதனால் சுமார் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து சென்று பேருந்து ஏறும் நிலைமை உள்ளது. இதனால் பள்ளிக்கு தக்க சமயத்தில் செல்லாமல் தவித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலிருந்து பேருந்துகளை இயக்க பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்' என தெரிவித்தனர்.

'நாங்கள் தகுந்த அதிகாரிகளிடம் இது குறித்து பேசி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கிறோம்' என போலீஸார் வாக்குறுதி அளித்ததன் பேரில் மாணவ மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் பவானிசாகர் - பண்ணாரி பகுதியில் போக்குவரத்து தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #ERODE #SCHOOL STUDENTS #TRANSPORTATION