'குடிப்பழக்கத்தை ஊக்குவிக்க முடியாது...' 'அதெல்லாம் எங்களோட கடமை இல்ல...' 'அப்படி பண்ணினா எங்களோட லைசன்ஸ் கேன்சல் ஆயிடும்...' இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 31, 2020 12:02 PM

கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுக்கடைகள் மூடப்பட்ட சூழலில், குடிமகன்களை காப்பாற்ற மது குடிப்பதை ஊக்குவிக்க முடியாது என இந்திய மருத்துவ சங்கம் கூறிய செய்தி கேரளக்குடிமகன்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

IMA says it cannot promote alcohol consumption

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் 144 ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து மாநிலங்களும் தங்களது இரயில் மற்றும் இன்னபிற போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர் மேலும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மருத்துவம் , விவசாயம் மற்றும் உணவு துறைகளை சார்ந்த கடைகளை தவிர  அனைத்து நிறுவனங்களும், கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் மதுபான கடைகளும் அடக்கம்.

கேரளாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், மது குடிக்க முடியாமல் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில், மதுவுக்கு அடிமையானவர்களின் உளவியல் சிக்கலை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டும் எனவும், மது குடிக்காமல் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் சில நபர்களை சமநிலை படுத்தும் நோக்கில் மருத்துவர்கள் பரிந்துரையின்படி அவர்களை மது குடிக்க அனுமதிக்கலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த அறிவிப்பால் மதுவுக்கு அடிமையான குடிமகன்கள் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டு, இந்த கருத்திற்கு பெரும் வரவேற்பை அளித்தனர். ஆனால் இன்று இந்திய மருத்துவ சங்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், மதுவிற்கு அடியானவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான கோளாறுகளுக்கு அறிவியல் ரீதியான சிகிச்சையையே அளிக்க வேண்டும். இவ்வாறு மன உளைச்சலில் இருக்கும் மது குடிப்பவர்களை கண்காணித்து அவர்களது வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கலாம் என்று கூறியுள்ளது.

மேலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மதுபானத்தை, ஒருவருக்கு சமநிலையை  ஏற்படுத்தும் என்று மருந்து அடிப்படையில் வழங்க மருத்துவர்களுக்கு எந்த சட்டபூர்வமான உரிமையோ, கடைமையோ கிடையாது. மேலும் மருத்துவர்கள் தங்களது மருந்து சீட்டில் மதுபானத்தை பரிந்துரைப்பது சிகிச்சையின் உரிமையை ரத்து செய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர். மேலும் மதுவை ஆன்லைனில் வாங்குவதான வசதியை ஏற்படுத்தினால் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்பதையும் கேரள முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : #IMA