'அய்யோ.. யாராவது காப்பாத்துங்க...' சத்தம் போடுறான்டா அவன், எட்றா அத...' கொடூர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தன் கைவரிசையை காட்டிய செல்போன் பறிப்பு கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் தமிழ்செல்வன்(20). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரி முடிந்து தன் ப்ராஜெட் வேலைக்காக சென்ற தமிழ்ச்செல்வனை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அவர்களின் நோக்கத்தை அறிந்த தமிழ் சத்தமிட முயற்சிக்கும் போது கும்பலில் இருந்த ஒருவன் கத்தியால் தமிழ்செல்வனின் இடது புற மார்பு பகுதியில் குத்தி விட்டு தப்பியோடினர்.
தமிழ் செல்வனின் தந்தை அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடுமை நடந்த கொஞ்ச நேரத்தில் அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இதே போல் மேலும் ஒரு செல்போன் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மகாலிங்கத்தை, 3 பேர் கொண்ட கும்பல் முகவரி கேட்பது போல பைக்கை நிறுத்தியுள்ளனர். வழிசொல்லிக்கொண்டிருந்த மகாலிங்கத்தின் முதுகில் மர்ம நபர்களில் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு, அவரது சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்துள்ளார். மேலும் மகாலிங்கத்தின் இருசக்கர வாகனத்தையும் எடுத்து கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
அங்கிருந்த பொதுமக்களில் சிலர் இந்த சம்பவத்தை பார்த்து உடனே கூச்சலிட்டு காரில் சென்ற ஒருவரிடம் உதவி கேட்டு மூன்று பேரையும் துரத்தி சென்றுள்ளனர். மாட்டிக்கொள்வோம் என்று பயந்த அந்த கும்பல் மகாலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
கத்திக்குத்தில் காயமடைந்த மகாலிங்கம், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக, சூலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த கொலை, கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியாக உள்ளனர்.