'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அசுர வேகத்தில் வந்த லாரி மோதியதில், தந்தை கண்முன்பே இளம் பெண் ஆடிட்டர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை எஸ்.எஸ்.குளத்தைச் சேர்ந்தவர் கனகராஜன். ஆடிட்டரான இவருக்குப் பத்மாவதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இரண்டாவது மகளான மோனிஷா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. முடித்து விட்டு ஆடிட்டராக பயிற்சி பெற்று வந்தார்.
இதனிடையே கனகராஜ் தனது மகள் மோனிஷாவுடன், மோட்டார் சைக்கிளில் கோவை- சத்தி சாலையில் குரும்பபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்று திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
மோதிய வேகத்தில் தந்தையும், மகள் மோனிஷாவும் தூக்கி வீசப்பட்டார்கள். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த மோனிஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயம் அடைந்த கனகராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மோனிஷா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை அடையாளம் காணும் வகையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தனது செல்ல மகளுடன் பைக்கில் சென்ற தந்தையும், மகளும் விபத்தில் சிக்கி, மகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.