"பிரேதத்தை எடுத்துடுவாங்க.. நைட்டே போகணும் சார்!".. 'லாக்டவுனில்' தம்பதியரின் 'கோரிக்கை'!.. 'நெகிழவைத்த' காவலர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 01, 2020 04:05 PM

மதுரையில் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள செல்வதற்கு வந்தவரின் அவசர தேவைக்காக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது சொந்த காரை கொடுத்து உதவி செய்துள்ள சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

cops gives own car to a man to attend funeral amid Corona Lockdown

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அவரது இறுதி சடங்கிற்கு தனது குடும்பத்துடன் செல்ல அனுமதி கேட்டு ரவி தெற்குவாசல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சங்கர் மாவட்ட ஆட்சியர்தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூற, இதைக்கேட்டு ரவியும் அவரது மனைவி ஜோதியும் அழுதபடியே, “நீங்களே அனுமதி வாங்கித் தாருங்கள், எங்களுக்கு அவ்வளவு விபரம் தெரியாது” என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் சங்கர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள, “சம்பந்தப்பட்டவர்களை அடுத்த நாள் காலை வரை சொல்லுங்கள், அனுமதி தருகிறோம்” என்று ஆட்சியர் அலுவலக தரப்பிலிருந்து கூறியுள்ளனர்.  ஆனால் அன்றைய இரவே ரவியின் மாமியாரின் உடல் அடக்கம் செய்யவேண்டி இருந்ததால் உடனடியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த தம்பதியினர் கோரினார்.

இதனை அடுத்து மீண்டும் உதவி ஆய்வாளர் சங்கர், ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கியதோடு காவல் நிலையத்திலேயே அனுமதி கொடுத்து அனுப்புவதற்கான அனுமதியை வாங்கினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக, காவல் நிலையத்திலேயே அனுமதி கடிதம் தயார் செய்து அவர்களுக்கு அளித்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர், தனது சொந்த காரிலேயே அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். உதவி ஆய்வாளரின் இந்த மனித நேயம் மிக்க செயலுக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.