'காத்து வாக்குல லேப்டாப்புடன்... தென்னந்தோப்பில் கடையைப் போட்ட ஐ.டி. ஊழியர்கள்!'... தேனியை அதிரவைத்த டெக்கீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சம் காரணமாகத் தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் ஐ.டி ஊழியர்கள் வேலை செய்யும் நிகழ்வு வைரலாகி வருகிறது.

தேனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கிராமத்தில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஐ.டி. ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பெங்களூரில் ஐடி நிறுவன ஊழியர்கள் சிலர், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று தங்கள் குழுவோடு தங்கி வேலை பார்க்கிறார்கள். தேனி அருகே அனுமந்தம்பட்டி கிராமத்தில் தங்கி வேலை செய்யும் இவர்கள், தங்களுக்கு இந்த இயற்கையான சூழ்நிலை வேலை பார்ப்பதற்கு வசதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, குழுவில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் பேசுகையில், "முதல் காரணம் பயம். அதனாலேயே நாங்கள் இங்கு வந்து பணிபுரிகிறோம். நகர்ப் புறங்களில் கொரோனா அபாயம் அதிகமாக இருக்கிறது. கிராமப் புறங்களில் அந்த அச்சம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. ஒரு முறை பணிநிமித்தம் காரணமாக நெதர்லாந்து சென்றேன். அப்போது அங்கு கிராமத்தில் இருந்து பணிபுரியும் வகையில் சூழ்நிலை அமைந்தது. அந்த சூழல் குழுவின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியது. அங்கு செயல்படுத்தியதை தற்போது இங்கும் செயல்படுத்த நினைத்தோம். இங்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. நல்ல காற்றை சுவாசிக்க முடிகிறது. குறிப்பாக கொரோனா அச்சம் இல்லை" என்றார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
