'புளி உருண்டை பரிகாரமா' ? ... அது என்ன ?.. உருண்டைய போட்டு ஆட்டைய போட்ட சாமியார் ... சிக்கிக் கொண்டது எப்படி ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Feb 28, 2020 07:55 PM

தேனி மாவட்டம் அருகே ஜோதிடத்தின் பெயரால் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A guy cheated and stolen a gold chain by the name of Jothidam

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன் அப்பகுதியில் விறகு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வைரமணி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மகள்கள் மூவருக்கும் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மனோகரன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்தியுள்ளார். மனோகரன் வீட்டில் இல்லாத நிலையில், வைரமணி தங்களது மகள்களின் ஜாதகத்தை எடுத்துக் கொடுக்க அதைப் பார்த்த அந்த நபர், இங்கு பிரச்சனைகள் உள்ளதாகவும், பரிகாரம் செய்தால் தான் விலகும் எனவும் சொல்லி தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

மனைவியின் வற்புறுத்தலின் பேரில், தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மனோகரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ஜோதிடர், உங்களது அனைத்து பிரச்சனைகளும் விலக புளி உருண்டை என்னும் பரிகாரத்தை செய்ய வேண்டுமென கூறியுள்ளார். இது குறித்து என்னவென வைரமணி கேட்டபோது 'புளி உருண்டை செய்து அதில் தங்க சங்கிலியை வைத்து உருட்டி அதை செம்பில் வைத்து பூஜை செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளார். இதை நம்பி வைரமணி தனது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை கழற்றிக் கொடுக்க இருவரையும் கண்களை மூடி வணங்க சொன்ன சாமியார், பூஜை முடிந்ததும் பணம் வாங்கி கொண்டு இடத்தைக் காலி செய்துள்ளார்.

மூன்று நாட்கள் புளி உருண்டையை தொடக் கூடாது என்ற ஜோதிடர் வாக்கில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அன்றிரவே மனோகரன் புளி உருண்டையை சோதித்ததில் ஜோதிடர் என்னும் பெயரில் அந்த நபர் கைவரிசை காட்டியுள்ளதை அறிந்து மனோகரன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில், தேனி பேருந்து நிலையத்தில் அவரை பார்த்த பார்த்து மனோகரனின் உறவினர் ஒருவர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்க கழுத்தில் வைரமணியின் மாலையுடன் பிடிபட்டார். தேனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அங்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் மோசடிக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #THENI #JOSIYAM #FORGERY