‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்....’ ‘இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்...’ முழக்கமிட்ட பெண் மீது சட்டப்பிரிவு 124ஏ பாய்ந்தது...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 21, 2020 12:33 PM

ஓவைசி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Pakistan Zindabad shouted the woman pounced on the Article 124 A

நாட்டின் பல்வேறு இடங்களில் சிஏஏ-விற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ”அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் சிஏஏவிற்கு எதிரான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மஜ்லிஸ் கட்சி எம்.பி அசாதுதீன் ஓவைசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அமுல்யா என்ற பெண்ணை மேடைக்கு அழைத்தனர். அவர் மேடை ஏறியதும் மைக்கை பிடித்துக் கொண்டு, “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கங்களை எழுப்புங்கள் என கூட்டத்தினரை பார்த்து கேட்டுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓவைசி உள்ளிட்டோர் அப்பெண்ணிடம் இருந்து மைக்கை பறிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் விடாமல் மீண்டும் மீண்டும் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷங்கள் எழுப்பினார்.

இதனால் ஓவைசி உள்ளிட்டோர் மிகுந்த கோபமடைந்தனர். ஒருவழியாக அவரிடம் இருந்து மைக்கை பறித்துக் கொண்டனர். அதன்பிறகும் கூட்டத்தினரை நோக்கி ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்”, “இந்துஸ்தான் ஜிந்தாபாத்” ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றி பேச முயற்சித்தார்.

இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் உதவியுடன் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து கீழே இறக்கினர். இதையடுத்து பேசிய ஓவைசி, அப்பெண்ணுடன் எனக்கோ அல்லது எங்கள் கட்சிக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.

அப்பெண் எழுப்பிய முழக்கங்களை நாங்கள் ஏற்கவில்லை. அவற்றை நிராகரிக்கிறோம். இப்படிப்பட்ட நபர்களை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கக் கூடாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்க மாட்டேன்.

நம்முடைய நாடு இந்தியா. இதன் நலனிற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே எதிரி நாடான பாகிஸ்தானை ஒருபோதும் நாம் ஆதரிக்க மாட்டோம். நமது ஒட்டுமொத்த நோக்கம் இந்தியாவை காப்பாற்றுவதே என்று கூறினார்.

அப்பெண்ணை கைது செய்த போலீசார் சட்டப்பிரிவு 124ஏ(தேசத்துரோக வழக்கு) கீழ் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

 

Tags : #BANGALORE