5000 பக்க ரிப்போர்ட் ரெடி.. அடுத்த 'வாரம்' தூக்கிருவோம்.. குழந்தைகள் ஆபாச 'வீடியோ' விவகாரத்தில்.. போலீஸ் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 04, 2019 02:41 PM
தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் குறித்த 5000 பக்க அறிக்கை தயாராக இருப்பதாக கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (Federal Bureau Of Investigation), மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் அதிகம் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக காவல்துறைக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.
அந்த பட்டியலை வைத்து தமிழகத்தில் யாரெல்லாம் இதுவரை ஆபாச படங்களை பார்த்துள்ளனர் என்ற பட்டியலை குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றங்களுக்கு எதிரான காவல்துறையினர் தயாரித்து இருக்கின்றனர். இந்தநிலையில் அடுத்த கட்டமாக கைது நடவடிக்கை இருக்கும் என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள பட்டியலின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களைக் கைது செய்ய அடுத்த வாரத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினால்கூட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்ஸோ சட்டத்தின்கீழ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். கூடுதலாகத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் பிரிவின்கீழும் வழக்குகள் பாயும். எந்தெந்த டிவைஸ்களில் இருந்து ஆபாச வீடியோக்கள், படங்கள் அனுப்பப்பட்டன. செல்போன் நம்பர்கள், ஐபி நம்பர், எந்த நெட்வொர்க், எத்தனை மணிக்கு பார்த்தார்கள்? யாருக்கெல்லாம் அந்த வீடியோவை அனுப்பினார்கள்? போன்ற புள்ளிவிவரங்கள் அதில் உள்ளன.
அடுத்த வாரம் அந்த பட்டியலை கமிஷனர், எஸ்.பி அலுவலங்களுக்கும் அடுத்த வாரம் பட்டியலை அனுப்பி வைத்து விடுவோம். குழந்தைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் பார்த்தவர்கள்மீது நடவடிக்கை பாயும். அதை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கண்காணிக்கும்,'' என தெரிவித்து உள்ளார்.