'பாஷை தெரியாத ஊரு; பானிபூரி தான் சோறு!'.. தீரன் பட பாணியில்.. சென்னை போலீஸாரின் 5 நாள் வேட்டை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 01, 2019 01:23 PM

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆனந்தன் மகனான 27 வயது பிரபாகரன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மோல்டிங் கம்பெனி நடத்தி வந்தார்.

chennai police brought 2 murderers from bihar like a cinema

தனது நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி வந்த பிரபாகரன், கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில். உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸார் குழு விசாரணையில் இறங்கியது. விசாரணையில், பீகாரைச் சேர்ந்த ரோஷன் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவரும் பீகாருக்கு ரயில் ஏறப்போகும் ரகசிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்ததும், இவர்களுக்கு முன்னர் விமானத்தில் போலீஸார் பீகாருக்குச் சென்றுவிட்டனர். இதை எப்படியோ அறிந்த இளைஞர்கள் இருவரும் பாதி வழியில் இறங்கி பஸ் ஏறி ஊருக்குச் சென்றுவிட்டனர். சென்னையில் வேலைபார்க்கும் பீகாரி ஒருவர்தான் இந்த இளைஞர்களுக்கு இந்தத் தகவலை போன் மூலம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் குதாகஞ்ச் காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன், மொழி தெரியாத ஊரில் 5 நாட்களாக தங்கி, பானிபூரி, சமோசா, ஜிலேபி போன்றவற்றை மட்டுமே உணவாக உண்டு, ஒரே ஒரு பஸ் மட்டுமே ஊருக்குள் நுழையக் கூடிய அந்த கிராமத்து  இளைஞர்களை பிடிக்கத் தக்க தருணத்துக்காக தமிழ்நாடு போலீஸ் காத்திருந்துள்ளனர். ஒருவழியாக அந்த 2 பேரையும் பிடித்தபோதும், பிடித்துக்கொண்டு குதாகஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோதும் ஊர் மக்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். அவர்கள் தமிழ்நாடு போலீஸை முதலில் நாட்டு துப்பாக்கிகள் வாங்குவதற்காக வந்தவர்கள் என நினைத்துள்ளனர். 5000 ரூபாய் கொடுத்தால் நாட்டு துப்பாக்கியே கிடைக்கும் இந்த ஊர் இளைஞர்களை எப்படி சார் பிடிச்சீங்க? என்று அந்த ஊர் போலீஸாரே அலறியுள்ளனர். அதன் பிறகு மேலதிகாரிகளின் உதவியுடன், அந்த இளைஞர்களை தமிழ்நாடு போலீஸார் சென்னைக்கு கொண்டுவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

தீரன் திரைப்படத்தில் வருவது போல், இத்தனை கஷ்டத்தையும் தாங்கி, கொலையாளிகளை பிடித்துவந்த தமிழ்நாடு போலீஸாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார். தமிழ்நாடு போலீஸ் குழுவில் இருந்த இந்தி தெரிந்த போலீஸான முபாரக் இந்த வழக்கில் பெரிதும் உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #MURDER